ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஆக துடிப்புமிக்க எரிமலைகளில் ஒன்றான மெராப்பி எரிமலை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அருகில் வசிக்கும் கிராமவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் பத்திரமாக வெளியேற்றி வருகின்றனர். எரிமலை வெடிப்புக்கான அறிகுறிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது.
எரிமலைக்கு அருகில் வசிக்கும் முதியோர், கர்ப்பிணிகள், மகளிர், சிறுவர்கள், உடற்குறையுள்ளோர் என 600க்கும் மேற்பட்டோரை இந்தோனீசியாவின் தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு நேற்று வெளியேற்றியது. கிருமித்தொற்று நெருக்கடிநிலையின்போது கிராமவாசிகள் வெளியேற்றப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் கடைப்பிடித்ததாக இந்தோனீசிய அரசாங்கம் தெரிவித்தது. வசிப்பிடங்களிலிருந்து துயர்துடைப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்ட கிராமவாசிகள் முகக்கவசம் அணிந்திருந்தனர். அதுமட்டுமல்லாது, பாதுகாப்பான தூர இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையால், மெராப்பி எரிமலை வெடித்தால் 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் எரிமலைக் குழம்பு, கறும்புகை அபாயம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

