எஸ்.வெங்கடேஷ்வரன்
தீபாவளிக்கு வழக்கமான பலகாரங்கள் உட்பட புதியன பலவற்றையும் 'பாவாஸ் டெலிகேசி' (Bawa's Delicacy) நிறுவனம் இவ்வாண்டு வழங்கி வருகிறது.
தீபாவளி என்றாலே முறுக்கு இல்லாமல் இருக்காது. அந்த வரிசையில், தென்னிந்திய நெய் முறுக்கு, கைமுறுக்கு, காசு முறுக்கு என பல புதிய முறுக்கு வகைகளை விற்பனைத் தெரிவுகளில் சேர்த்துள்ளது பாவாஸ்.
காஜு கட்லி, பாதாம் பருப்பு உருண்டை, 'ஓண்டே ஓண்டே', காரமான உருளைக்கிழங்கு வறுவல் போன்ற மற்றப் பல புது வரவுகளும் வழங்கப்படுகின்றன.
கொவிட்-19 சூழலைக் கருதி தீபாவளிக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்னதாகவே தேவையான பலகாரங்களை சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்ததாக கூறினார் 'பாவாஸ் டெலிகேசி' நிறுவன இயக்குநர் திரு முகம்மது ஃபரூக், 50.
"நோய்ப் பரவல் சூழலால் பலரும் ஜோகூர் பாரு, மலேசியா, இந்தியா சென்று தீபாவளிக்கான பொருட்களை வாங்க முடியாது. சிங்கப்பூரிலேயே வாங்க வேண்டும் என்பதால் இவ்வாண்டு வியாபாரம் சற்று கூடியுள்ளது. இணையத்தில் வாங்குபவர்களும் அதிகரித்துள்ளனர்," என்றார் திரு ஃபருக்.
பலகாரங்களின் மொத்த விற்பனை நிறுவனமான பாவாஸ், கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சுமார் எட்டு ஆண்டுகளாக தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் கேம்பல் லேன் விற்பனைச் சந்தையில் கடை ஒன்றை வழக்கமாக எடுத்து நடத்தும். ஆனால் இவ்வாண்டு 134 டன்லப் ஸ்திரீட்டில் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தீபாவளிக்காக நிறுவனத்தார் கடை ஒன்றைத் திறந்துள்ளனர்.
பாவாசின் மொத்த விற்பனைக் கடை, 3 லோரோங் பக்கர் பத்து என்ற முகவரியில் அமைந்துள்ளது. இங்கும் சென்று பலகாரங்களை வாங்கலாம். மேல் விவரங்களுக்கு bawas.com.sg என்ற இணைப்பை நீங்கள் நாடலாம்.