மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் இரு ஹெலிகாப்டர்கள் உரசிய விபத்தில் இரு ஆடவர்கள் மாண்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தாமான் மெலாவதி என்னும் இடத்தில் இன்று காலை பறந்து சென்று கொண்டிருந்தபோது அவ்விரு ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஹெலிகாப்டரிலும் தலா இருவர் பயணம் செய்ததாகவும் அவர்களில் ஒருவர் பெண் என்றும் தீயணைப்பு, மீட்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
தனித்தனியாக பறந்து சென்ற ஹெலிகாப்டர்கள் திடீரென ஒன்றோடொன்று உரசியதாகவும் அதனைத் தொடர்ந்து ஒரு ஹெலிகாப்டர் மட்டும் சுமார் மூன்று நிமிடங்களுக்கு வானில் சுழன்ற பின்னர் கீேழ விழுந்ததாகவும் ஊடகங்களிடம் ஒருவர் கூறினார்.
முற்பகல் 11.15 மணியளவில் கிள்ளாங் கேட் அணை அருகே உள்ள தண்ணீர் குழாய் அருகில் அந்த ஹெலிகாப்டர் விழுந்து கிடந்தது. அதே நேரம் மற்றொரு ஹெலிகாப்டர் தமிழ் பள்ளிக்கூடம் ஒன்றின் அருகே பத்திரமாகத் தரை இறங்கியதாக அம்பாங் ஜெயா காவல்துறை துணை ஆணையர் முஹம்மது ஃபாருக் இஷா கூறினார். இரு ஹெலிகாப்டர்களும் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்தவை என்றும் இருவர் மாண்டது எவ்விதம் என விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் ஹெலிகாடர்கள் விபத்தில் சிக்கியது எவ்வாறு என்பதை விமானப் போக்குவரத்துத் துறை விசாரணை நடத்தும் என்றும் திரு முஹம்மது ஃபாருக் கூறினார்.

