அமெரிக்க அதிபராக தேர்தலில் வென்றுள்ள ஜோ பைடன் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் சுமார் ஐநூறாயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்க வாய்ப்பு இருப்பதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தேர்தல் களத்தில் பிரசாரம் மேற்கொண்ட திரு பைடன் சில வாக்குறுதிகளை அளித்தார். "இந்தியாவைச் சேர்ந்த 500,000 பேர் உள்ளிட்ட சுமார் 11 மில்லியன் மக்கள் எவ்வித ஆவணங்களும் இன்றி அமெரிக்காவில் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கு வதற்கான ஒரு வரைவை ஏற்படுத்துவோம். அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 95,000 அகதிகளை ஏற்கக்கூடிய நிலையில் புதிய வரைவு அமையும்," என பிரசார அறிக்கை கூறியது. அமெரிக்கக் குடிநுழைவுத் துறையின் முக்கிய கொள்கைகளை திரு பைடன் நிர்வாகம் பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப அடிப்படையிலான குடியேற்றத்தை அவரது நிர்வாகம் ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது.
முஸ்லிம் மக்கள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்திருக்கும் பயணத் தடையை புதிய நிர்வாகம் அகற்றக்கூடும் என்றும் செய்திகள் கூறுகின்றன. திரு பைடன் பிரசாரத்தின்போது வெளியிடப்பட்ட கொள்கை அறிக்கையின் சில அம்சங்கள் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. காலம் காலமாக அமெரிக்காவில் வேரூன்றி பல தலைமுறைகளாக உருவெடுத்துவிட்ட இந்திய வம்சாவளியினர் அமெரிக்க வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணை புரிந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு ள்ளது.

