வாஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் ஜோ பைடனின் பணி அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை. அதிபர் டிரம்புக்குப் பிறகு உள்ளூரிலும் அனைத்துலக அளவிலும் பல்வேறு சவால்களை அவர் எதிர்நோக்குகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இயல்பாக இருந்த சீனாவுடனான அமெரிக்க உறவு தற்போது அதள பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது.
ஐரோப்பாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஒதுங்கியிருப்பது. ஈரான் செறிவூட்டப்பட்ட அணுசக்தி எரிபொருளைக் குவித்து வருவது, அப்போதைக்கு அப்போது அணுவாயுதங்களைக் காட்டி மிரட்டும் வடகொரியா, உலகம் வெப்பமடைதல், மெக்சிகோவுடனான எல்லையில் அகதிகள் பிரச்சினை, ரஷ்யாவுடனான அணுவாயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் காலவதியாவது, உள்ளூரில் கட்டுப்படுத்த முடியாமல் பரவும் கிருமித்தொற்று, இதனால் ஏற்பட்டுள்ள ேவலையின்மை என சவால்களின் பட்டியல் நீள்கிறது.
அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் 'அமெரிக்காவுக்கு முன்னுரிமை' எனும் தாரக மந்திரம், அவரது கணிக்க முடியாத அதிரடி முடிவுகள், அனைத்துலக ஒத்துழைப்புக்கு எதிரான நிலை ஆகியவற்றால் வன்மம் கொண்டிருக்கும் நாடுகளையும் பைடன் சமாளித்தாக வேண்டும். ஆனால் ஒபாமா நிர்வாகத்தில் துணை அதிபராகவும் செனட் சபை வெளியுறவு குழுவின் தலைவராகவும் ஜோ பைடன் இருந்துள்ளதால் அனைத்துலக விவகாரங்களில் அவருக்கு கிடைத்த அனுபவங்கள் தற்போது கைகொடுக்கும் என்று வெளியுறவு கொள்கை நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிபர் டிரம்ப் அமெரிக்கா மீதான எண்ணத்தை பாழ்படுத்திவிட்டார். இதனை மாற்ற பைடனுக்கு சிரமமிருக்காது என்று ஒபாமா வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகரான ராபர்ட் மால்லே தெரிவித்தார்.
இதற்கிடையே அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்ளாத டோனல்ட் டிரம்ப், தேர்தலில் வெற்றி பெற்றதாக தன்னைத் தவறாக ஜோ பைடன் காட்டிக் கொள்வதாக கூறியுள்ளார். "ஜோ பைடன் தான் வெற்றி பெற்றதாகக் காட்டிக்கொள்ள ஏன் அவசரப்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது நட்பு ஊடகங்களும் அவருக்கு உதவி செய்து வருகின்றன. உண்மை வெளியாவதை அவர்கள் விரும்பவில்லை," என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

