தேர்தல் தோல்வியை ஏற்க மறுக்கும் டிரம்ப்

2 mins read
1920e695-bb18-4639-ae48-7bca55bad6be
தேர்தல் முடிவுகள் குறித்த விரக்தியில் டிரம்ப் ஆதரவாளர்கள். (படம்: ராய்ட்டர்ஸ்) -

அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தமக்கு ஏற்பட்ட தோல்வியை ஏற்க மறுத்து அதிபர் டோனல்ட் டிரம்ப் பிடிவாதம் பிடித்துவரும் நிலையில், அடுத்த இரண்டரை மாதங்களில் வெள்ளை மாளிகையில் அதிபராக அமர்வதற்கான நடவடிக்கைகளில் தேர்தலில் வெற்றி பெற்ற திரு ஜோ பைடன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெரும்பான்மையான 270 வாக்குகளையும் கடந்து 290 வாக்குகளை ஜனநாயக கட்சியின் திரு பைடன் கைப்பற்றியுள்ளார். 214 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியை தழுவியுள்ள திரு டிரம்ப், தேர்தல் முடிவை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளார்.

தோல்வியை ஏற்க திரு டிரம்ப் மறுத்துள்ளதால், திரு பைடனிடம் அதிகாரத்தை மாற்றிவிடும் ஏற்பாடுகளில் அரசு தரப்பில் இழுபறி நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது. அதிகாரத்தை மாற்றிவிடும் ஏற்பாடுகளை முன்னின்று நடத்த வேண்டிய அமெரிக்க பொதுச் சேவை நிர்வாகத் துறையில் (ஜிஎஸ்ஏ) அதிபர் டிரம்ப் 2017ல் நியமித்த அதிகாரிகள் இருப்பதால், தேர்தலில் வெற்றியாளரை அதிகாரபூர்வமாக அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், வெள்ளை மாளிகை பணியாளர்களை நியமிப்பது, அரசாங்க செலவினத்திற்காக மில்லியன் கணக்கான டாலர் நிதியைப் பெறுவது போன்றவற்றை மேற்கொள்வதில் திரு பைடன் தரப்பிற்குச் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. என்றாலும், அதிகாரத்தைச் சுமுகமாக மாற்றிவிடும் நடவடிக்கைகளை திரு டிரம்ப் தரப்பு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று பலதரப்பும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.

டிரம்ப் தோல்வியை ஏற்க கோரி மனைவி, மருமகன் அறிவுறுத்து

இந்நிலையில், திரு டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் என அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் மருமகன் ஜெராட் குஷ்னரும் அறிவுறுத்தியுள்ளதாக சிஎன்என் இணையத்தளம் செய்தி வெளியிட்டது. ஆனால், தேர்தல் முடிவை எதிர்த்து திரு டிரம்ப் தொடர்ந்து போராட வேண்டும் என அவரது இரு மகன்களான டோனல்ட் ஜூனியர் மற்றும் எரிக் வலியுறுத்தி இருப்பதாக இந்த விவகாரம் பற்றி அறிந்த தரப்பு சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலை "தேர்தல் திருட்டு" என்று திரு டிரம்ப் வர்ணித்துள்ளார். ஆனால், அவர் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத டிரம்ப்பின் குடியரசுக் கட்சியினர் சிலரே கருத்துக் கூறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள், தேர்தல் முடிவை அறிவித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் மற்றும் பைடனுக்கு இடையிலேயோ அவர்களது பிரசாரக் குழு உறுப்பினர்களுக்கு இடையிலேயோ உரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என்று பைடன் பிரசாரக் குழுத் துணை மேலாளர் கேட் ஃபெடிங்ஃபீல்ட் கூறினார்.