யங்கூன்: மியன்மாரில் இராணுவ ஆட்சி முடிவிற்கு வந்தபின் நடந்த இரண்டாவது பொதுத் தேர்தலில் போதிய இடங்களைக் கைப்பற்றி வெற்றி மகுடம் சூடி இருப்பதாக ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக லீக் அறிவித்துள்ளது. அதிகாரபூர்வமாக முடிவு அறிவிக்கப்படவில்லை என்றபோதும் ஆட்சியமைக்கத் தேவையான 322 இடங்களைக் கைப்பற்றிவிட்டோம் என்று தேசிய ஜனநாயக லீக் பேச்சாளர் மியோ நுன்ட் கூறியதாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி தெரிவித்தது.
425 உறுப்பினர்களைக் கொண்ட மியன்மார் மக்களவையின் 325 இடங்களுக்கும் 217 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையின் 161 இடங்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. கடந்த 2015ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக லீக் கட்சி 390 இடங்களைக் கைப்பற்றி இருந்தது.
ஏறத்தாழ 37 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்ற நிலையில், கிளர்ச்சிகள் காரணமாக வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டதால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்க முடியாமல் போனதாகக் கூறப்பட்டது. அத்துடன், ராக்கைன் மாநிலத்தில் முடங்கிக் கிடக்கும் நூறாயிரக்கணக்கான ரோஹிங்ய முஸ்லிம்களும் வாக்களிக்க இயலவில்லை எனச் சொல்லப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோரைத் தனது குடிமக்களாக மியன்மார் கருதுவதில்லை.

