கோலாலம்பூர்: தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் 2021ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் எதுவும் இடம்பெறாததால் மலேசிய இந்தியச் சமூகத்தினர் தங்களது மனக்குறையை வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், கல்வி அமைச்சுக்கு 50 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்மூலம் வட்டார மொழிப் பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளும் பலனடையும் என்றும் மனிதவள அமைச்சர் எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து மூத்த கல்வி அமைச்சர் டாக்டர் ரட்ஸி ஜிடின் விரைவில் அறிவிப்பார் என்று திரு சரவணன் குறிப்பிட்டார்.
"வழக்கமாக, ஒவ்வோர் ஆண்டும் வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கென 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும். இம்முறை அத்தகைய அறிவிப்பு எதுவும் இடம்பெறாததற்கு இந்தியச் சமூகத்தினரிடம் இருந்து எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின.
"இதன் தொடர்பில் கல்வி அமைச்சருடனும் நிதி அமைச்சருடனும் பேசினேன். கல்வி அமைச்சுக்கான 50 பில்லியன் ரிங்கிட் நிதியில் தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதியும் அடங்கும் என்று அவ்விருவரும் என்னிடம் தெரிவித்தனர்," என்று அமைச்சர் சொன்னார்.
தமிழ்ப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால் இந்தியச் சமூகத்தினர் பொறுமையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

