ஆறுகளை மாசுபடுத்துவோருக்குக் கடுமையான அபராதம் விதிக்க வழிவகுக்கும் சட்டத்திருத்தங்களுக்கு மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்குக் கட்டாயச் சிறைத்தண்டனை விதிக்கவும் புதிய சட்டத்திருத்தங்கள் வழிவகை செய்கின்றன.
ஆற்றுநீரை மாசுபடுத்துவோருக்கான அபராதத்தை 10,000 ரிங்கிட்டில் இருந்து 100,000 ரிங்கிட்டாக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று சிலாங்கூர் முதல்வர் அமிருதீன் ஷாரி கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கண்டாங், ரவாங் ஆகிய ஆறுகளை மாசுபடுத்தியதாகக் கூறி, நான்கு செம்பனை எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகளின் இயக்குநர்கள் மீது செலாயாங் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சுமத்தப்பட்டது. குற்றம் புரிந்தது உறுதியானால், அவர்களுக்கு ஐந்து ஆண்டு வரை சிறை அல்லது 100,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
அத்துடன், அந்நால்வரும் வெளிநாட்டு ஊழியர்கள் எட்டுப் பேருக்குச் சட்டவிரோதமாக அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகின்றனர். குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் 30,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

