இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த மகனை துபாய் போலிஸ் தலைமையகத்தில் போலிசின் உதவியுடன் சந்தித்தார் மலேசியாவைச் சேர்ந்த 38 வயது ரோஸ் ஹு.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ரோஸ் ஹுவின் மகனை அவரது முன்னாள் கணவர் துபாய்க்கு விடுமுறைக்காக அழைத்துச் சென்றார்.
மகனை மலேசியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்பதாக ரோஸ் ஹுவின் முன்னாள் கணவர் நீதிமன்றத்திற்கும் எழுத்துபூர்வமாகத் தெரிவித்திருந்தார். ஆனால், துபாய்க்கு சென்ற பிறகு தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டார்.
அதனையடுத்து, மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு துபாய் நீதிமன்றத்தின் உதவியை நாடினார் ரோஸ் ஹு.
முதலில் இரண்டு நீதிமன்றங்கள் அந்த வழக்கை, தள்ளுபடி செய்தாலும், துபாய் கேசேஷன் நீதிமன்றம் வழக்கை ஏற்றுக்கொண்டு, "தாயிடம்தான் குழந்தை வளரவேண்டும்," என்று தீர்ப்பளித்தது.
மலேசிய நீதிமன்றத்துக்கு ரோஸ் ஹுவின் முன்னாள் கணவர் எழுத்துபூர்வமாக வழங்கிய உத்தரவாதத்தை மீறி, மகனை மலேசியாவுக்கு அழைத்துச் செல்லாததை நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் மகன் தாயிடம் வளர தீர்ப்பளித்ததுடன், சிறுவனை தாயிடம் ஒப்படைக்குமாறு துபாய் நீதிமன்றம் அந்த ஆடவருக்கு ஆணையிட்டது.
கொவிட்-19 சூழல் காரணமாக அனைத்துலக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும், கடந்த ஜூலை மாதத்தில் மலேசியாவிலிருந்து துபாய்க்கு சென்றார் ரோஸ் ஹு.
நீதிமன்றத்தின் ஆணையைக் கேட்ட அந்த ஆடவர், தம் மகனுடன் மீண்டும் காணாமல் போனார்.
துபாய் போலிசார் 4 மாதங்களாக தேடுதல் வேட்டை மேற்கொண்ட பிறகு, ஐக்கிய அரபு சிற்றரசுகளின் மற்றொரு தீவில் தந்தையையும் மகனையும் கண்டுபிடித்தனர்.
ஈராண்டுகளுக்குப் பிறகு, நேற்று தாயும் மகனும் சந்தித்துக்கொண்டனர்.
ஆயினும், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

