உலகம் முழுவதும் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொவிட்-19 சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் சீனா வித்தியாசமான முறையில் சிந்தித்து ஹாங்காங் ஜனநாயகவாதிகளை கட்டுக்குள் கொண்டு வர 'தேசப்பற்று' சோதனையை அறி முகப்படுத்தியிருக்கிறது.
போதுமான தேசப்பற்று இல்லாத உறுப்பினர்களை உடனடியாக பதவி யிலிருந்து நீக்குவதே புதிய நடவடிக்கையின் நோக்கம் என்று 'எச்கே01', 'சிங்தாவ்' ஆகிய உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தத் தகவல் வெளியான சில மணி நேரங்களில் ஜனநாயக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
முன்னதாக, தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்கும் அரசியல்வாதிகளை ஹாங்காங் அரசாங்கம் உடனடியாக நீக்குவதற்கு ஏதுவாக தீர்மானம் ஒன்றை பெய்ஜிங் நிறைவேற்றியது.
இதையடுத்து நால்வரின் பதவி பறிக்கப்பட்டது.
இது, ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவாளர்களை நசுக்குவதற்காக பெய்ஜிங் எடுத்துள்ள மற்றொரு நடவடிக்கை என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி விலக முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் சிக்கல் அதிகரித்துள்ளது.
நால்வரின் பதவி நீக்கம், மற்ற ஜனநாயக ஆதரவாளர்களையும் ஆத்திரமூட்டியுள்ளது. இதனால் இவர்களுக்கு ஆதரவாக 15 உறுப்பினர்கள் பதவி விலகியிருக் கின்றனர். ஹாங்காங் சுதந்திரத்தை ஆதரித்தால், சீனாவின் இறை யாண்மையை ஏற்க மறுத்தால், ஹாங்காங் விவகாரத்தில் தலையிட வெளிநாட்டு சக்திகளைக் கேட்டுக் கொண்டால் அல்லது மற்ற வழி களில் தேசிய பாதுகாப்புக்கு மிரட்ட லாக விளங்கினால் அதற்கு காரண மான சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தீர்மானத்தை நிறைவேற்றிய பெய்ஜிங் அரசாங்கம் குறிப்பிட்டது.
நீதிமன்றத்தை அணுகாமல் ஹாங்காங் நிர்வாகம் நேரடியாக சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய புதிய நடைமுறை அனுமதி அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் ஹாங்காங்கில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்திய சீனா, தற்போது சட்டமன்ற உறுப்பினர்களையும் பதவியிலிருந்து அகற்றியுள்ளது.

