பிலிப்பீன்சின் லுசோன் தீவை சக்திவாய்ந்த வாம்கோ புயல் தாக்கியதில் தலைநகர் மணிலா முடங்கியது.
மணிலாவில் நேற்று கனமழை பெய்ததில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
நகரின் பல இடங்களில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. படகுகள் மூலம் பலர் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து வெளியேறினர்.
மரிகினா நகரிலும் ரிசால் மாநிலத்திலும் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிக்கு விரைந்தனர்.
நிலைமை மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மரிகினா நகர் மேயரான திரு மார்சிலினோ தியோடோரோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதிகாலை நேரத்திலிருந்து தங்கள் வீட்டு மொட்டை மாடியில் காத்துக்கொண்டிருப்போரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டர்களை அனுப்பிவைக்கும்படி பிலிப்பீன்ஸ் குடிமைத் தற்காப்புப் படையை திரு தியோடோரோ கேட்டுக்கொண்டார்.
மரிகினா நகரில் ஏறத்தாழ 40,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தம்மிடம் 50 படகுகள் மட்டுமே இருப்பதாக அவர் கூறினார்.

