'நஜிப்பின் ஆலோசனையை புறக்கணிக்க வேண்டும்'

'நஜிப்பின் ஆலோசனையை புறக்கணிக்க வேண்டும்'

2 mins read
6f64e428-5654-412d-865b-08195517b0bc
மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது. (படம்: ராய்ட்டர்ஸ்) -

கோலா­லம்­பூர்: குற்­ற­வாளி என நீதி­மன்­றத்­தால் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட நஜிப் ரசாக்­கின் ஆலோ­ச­னை­களை மலே­சிய அர­சாங்­கம் புறக்­க­ணிக்க வேண்­டும் என்று அந்­நாட்­டின் முன்­னாள் பிர­த­மர் டாக்­டர் மகா­தீர் முகம்­மது தெரி­வித்­துள்­ளார். நஜிப்­புக்கு எதி­ரான ஊழல் குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ள­தால் அவர் ஒரு குற்­ற­வாளி என்று டாக்­டர் மகா­தீர் கூறி­னார்.

நஜிப்பை நாடா­ளு­மன்­றத்­தில் பேச அனு­ம­திப்­பது நாடா­ளு­மன்­றத்தை அவ­ம­திக்­கும் செய­லா­கும் என்­றார் அவர்.

"குற்­ற­வாளி எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட ஒரு­வர் நாடா­ளு­மன்­றத்­துக்­குச் சென்று அர­சாங்­கத்­துக்­கு ஆலோ­சனை வழங்­கும் கொடுமை எந்த நாட்­டி­லும் நிக­ழாது. மலே­சி­யா­வில் அவ்­வாறு நடந்­தது மிக­வும் ஆச்­ச­ரியமாக இருக்கிறது," என்று 'தி மலே­சி­யன் இன்­சைட்' செய்தி நிறு­வ­னத்­தி­டம் தமது அதி­ருப்­தி­யைத் நேற்று தெரி­வித்­தார் டாக்­டர் மகா­தீர்.

"மலே­சி­யா­வில் மட்­டும் இது­போன்­றவை நடக்­கும். குற்­ற­வா­ளி­கள் அர­சாங்க ஆலோ­ச­கர்­க­ளாக இருப்­பதை எண்ணி நாங்­கள் பெருமை அடை­ய­லாம். அர­சாங்­கத்­தின் கையா­ளா­காத நிலையை இது காட்­டு­கிறது. குற்­ற­வாளி ஒரு­வர் அர­சாங்­கத்­தைச் சாடும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வின் நாடா­ளு­மன்­றத்­துக்­குக் களங்­கம் ஏற்­பட்­டுள்­ளது," என்­றார் டாக்­டர் மகா­தீர்.

1எம்­டிபி ஊழல் தொடர்­பான வழக்கு விசா­ரணை ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், நாடா­ளு­மன்­றத்­தில் பேசு­வ­தற்கு மட்­டும் நஜிப்­புக்கு நேரம் இருக்­கி­றதா என்று டாக்­டர் மகா­தீர் கேள்வி எழுப்­பி­னார்.

"நஜிப்­புக்கு எதி­ராகத் தொடுக்­கப்­பட்ட வழக்­கு­கள் நிறுத்­தப்­பட்­டி­ருப்­பது மிக­வும் விசித்­தி­ர­மாக உள்­ளது. ஆனால் நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்ற அவ­ருக்கு நேரம் இருக்­கிறது," என்று டாக்­டர் மகா­தீர் தெரி­வித்­த­தாக 'ஃப்ரீ மலே­சியா டுடே' இணை­யச் செய்தி சேவை தெரி­வித்­தது.

கடந்த ஜூலை மாதத்­தில் 1எம்­டிபி ஊழல் தொடர்­பான முதல் வழக்­கில் நஜிப் குற்­ற­வாளி என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அவ­ருக்கு 12 ஆண்டு சிறைத் தண்­ட­னை­யும் 210 மில்­லி­யன் ரிங்­கிட் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது. தீர்ப்பை எதிர்த்து நஜிப் மேல்­மு­றை­யீடு செய்­துள்­ளார்.

அவ­ருக்கு எதி­ராக தொடுக்­கப்­பட்ட மற்ற வழக்­கு­கள் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. பெக்­கான் தொகு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக தொடர்ந்து பதவி வகிக்­கும் நஜிப், தேசிய முன்­னணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மன்­றத்­தின் தலை­வ­ராக அண்­மை­யில் நிய­மிக்­கப்­பட்­டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

தேசிய முன்­ன­ணி­யைச் சேர்ந்த 42 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் 39 பேர் அம்­னோ­வைச் சேர்ந்­த­வ­ர்­கள்.

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 1எம்டிபி அமைப்புக்கு ஏறத்தாழ 32.3 பில்லியன் ரிங்கிட் கடன் பாக்கி இருப்பதாக மலேசிய அரசாங்கம் கூறியது.