உலகின் ஆகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமான வட்டார பரந்த பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தில் 15 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இன்று கையெழுத்திட்டனர். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இதன் உறுப்பு நாடுகள் அனைத்தும் இணக்கம் கண்டுள்ளன.
பொருள் மற்றும் சேவைத்துறையில் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் இந்த ஒப்பந்தம், இணைய வர்த்தகம் மற்றும் அறிவுசார் சொத்து குறித்த பாதுகாப்புகளை உள்ளடக்குகிறது. இதில் பங்குபெற்றுள்ள நாடுகளின் கையில் உலகப் பொருளியலில் கிட்டத்தட்ட 30 விழுக்காடும் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கும் உள்ளது. உறுப்பு நாடுகளிடையே வாங்கி விற்கப்படும் பொருட்களின் வர்த்தகத் தடை குறைந்தது 92 விழுக்காடு குறையும் என்பது இந்த ஒப்பந்தங்களின் முக்கிய அனுகூலங்களில் ஒன்று. அத்துடன் சிங்கப்பூரின் இறக்குமதிகளுக்கு சந்தை நுழைவுக்கான கூடுதல் முன்னுரிமையை இந்த ஒப்பந்தம் அளிக்கும் என்று வர்த்தக, தொழில்துறை அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூர், புருனை, கம்போடியா, இந்தோனீசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய பத்து ஆசியான் உறுப்பு நாடுகளுடன் ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா மற்றும் நியூசிலாந்து இந்த ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன.
பன்னாட்டு வர்த்தகத்தின் நிலைத்தன்மை ஆட்டங்காணுவதுடன் உலகப் பொருளியல் வளர்ச்சியும் மந்தமாகிவரும் இந்நேரத்தில் இந்த ஒப்பந்தம் உலகத்திற்கு முக்கியமான படி என்று பிரதமர் லீ சியன் லூங், ஆர்சிஇபி உச்சநிலைக் கூட்டத்தின்போது கையெழுத்திடுவதற்கு முன்னர் தெரிவித்தார். "திறந்த மற்றும் இணைப்புகளைக் கொண்ட தளவாட தொடர்களைக் கட்டிக்காக்கவும் தடையற்ற வர்த்தகத்தையும் பரஸ்பர நம்பிக்கையையும் வளர்க்க எங்களது ஒட்டுமொத்தமான கடப்பாட்டை இது காட்டுகிறது," என்று பிரதமர் லீ கூறினார்.

