அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் அந்நாட்டின் தலைமகள் மிலேனியா டிரம்ப்பும் தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவிப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை அறிவித்துள்ளது.
"இவ்வாரம் தீபவாளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தலைமகளும் நானும் எங்களது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். இந்த தீபத்திருநாளில் நண்பர்கள், அண்டை வீட்டார் மற்றும் அன்புக்குரியவர்கள் ஒன்றுசேர்ந்து தீயதை நன்மை வென்றது, இருளை ஒளி வென்றது, அறியாமையை அறிவு வென்றது போன்ற ஆன்மிக வெற்றியை அனுசரிக்கின்றனர். வீடுகள், வேலை இடங்கள், சமூகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தீபங்கள் ஏற்றப்படும் வேளையில் பாரம்பரியங்களும் சமயங்களும் நமது வாழ்க்கையில் ஏற்படுத்தும் நம்பிக்கையையும் கடப்பாட்டு உணர்வையும் இந்த தீபங்களின் வெப்பம் எங்களுக்கு நினைவூட்டுகிறது," என்று அந்த வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.
"அமெரிக்கா மிகவும் சமயப்பற்று நிறைந்த நாடு," என்று திரு டிரம்ப் தெரிவித்தார். "அமெரிக்கர்கள் அனைவரும் தங்களது மனசாட்சிகளின்படி தங்களது சமய நம்பிக்கைகளைப் பின்பற்றி வாழும் அரசமைப்புச் சட்ட உரிமையைத் தற்காப்பதற்காக எனது நிர்வாகம் மேற்கொண்டுள்ள உழைப்பு குறித்து நான் பெருமை அடைகிறேன்," என்று அவர் கூறினார்.
அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீபாவளியைக் கொண்டாடு மில்லியன் கணக்கானோருக்கு தாமும் தமது மனைவியும் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டத்திற்காகவும் வளப்பமான புதிய தொடக்கத்திற்காகவும் வாழ்த்துவதாக திரு டிரம்ப் கூறினார்.

