அமெரிக்காவில் நேற்றைய (நவம்பர் 15) முன்தின நிலவரப்படி கொரோனா கிருமித்தொற்று 11 மில்லியனைக் கடந்துவிட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
ஒரு வாரத்திற்கு முன்புதான் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 10 மில்லியனைக் கடந்து இருந்தன. அதையடுத்து, 400 அமெரிக்கர்களில் ஒருவர் கிருமித்தொற்று ஆளாகி இருக்கிறார்.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் பல மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேளையில் கிருமித்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
மிச்சிகன் மாநிலத்தில் நாளை மறுநாள் தொடங்கி அடுத்த மூன்று வாரங்களுக்கு உயர்நிலைப் பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளதோடு உணவகங்களில் உணவருந்தவும் தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்காவில் குளிர்காலப் பருவம் தொடங்கியுள்ளதால் பலரும் உள்புறச் சூழலில் நேரத்தைச் செலவிடுகின்றனர். இந்தச் சூழலில் கிருமி வேகமாகப் பரவக்கூடும்.
கச்சேரிகள், சூதாட்டங்கள், திரையரங்குகள், பனிச்சறுக்கு விளையாட்டுகள் போன்ற பொது நிகழ்வுகளுக்கு மிச்சிகன் ஆளுநர் கிரெச்சன் விட்மர் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளார். மேலும், இல்லங்களில் இரு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.
"இந்தக் கிருமிப் பரவல் சூழலில் நாம் மிக மோசமான கட்டத்தில் இருக்கிறோம். இதற்கு முன்னதாக நிலவரம் இதைவிட மோசமாக இருந்ததில்லை. எனவே உடனடி நடவடிக்கை தேவை," என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் விவரித்தார்.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வாஷிங்டன் மாநில ஆளுநர் ஜே இன்ஸ்லி, ஒரு மாதத்திற்கு உணவகங்களில் உணவருந்த தடை விதித்துள்ளார். உடற்பயிற்சிக் கூடங்களை மூடவும் கடைகளில் கால்வாசி அளவு மட்டும் கூட்டத்தை அனுமதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வீடுகளுக்கு விருந்தினர்கள் வர தடை விதித்துள்ள இன்ஸ்லி, வெளிப்புறச் சூழலில் அதிகபட்சம் ஐந்து பேர் மட்டுமே கூட வரம்பு விதித்துள்ளார்.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர்கள் சிலரும் தத்தம் மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த வாரயிறுதியில் வட டக்கோட்டா உட்பட அமெரிக்காவின் 36 மாநிலங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு ஜோ பைடனின் கொவிட்-19 குழுவுக்குத் தலைமை தாங்கும் டாக்டர் விவேக் மூர்த்தி, நாட்டில் தற்போது கிருமித்தொற்று அதிகரித்திருப்பது கவலை தந்தாலும், புதிய கட்டுப்பாடுகள் பலன் தராவிட்டால் மட்டுமே தேசிய அளவிலான முடக்கநிலை அறிவிக்கப்படும் என்று 'ஃபாஸ் நியூஸ்' செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
"குறிப்பிட்ட பகுதியில் கிருமிப் பரவல் நிலவரத்தைப் பொறுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படலாம் அல்லது தளர்த்தப்படலாம்," என்றார் அவர்.

