மலேசியாவில் பெருகும் கொவிட்-19 பரவல்; அதிகம் பரவும் இடங்களில் முடக்கத்துக்கு ஆலோசனை

2 mins read
1e2217a9-0a7c-4f14-bcd3-76d6b4db1858
கோலாலம்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு 392 கொரோனா தொற்று சம்பவங்கள் இன்று பதிவானது குறிப்பிடத்தக்கது. இதில் 385 சம்பவங்கள் தாமன்லேலா கட்டுமானத் தள குழுமத்தைச் சேர்ந்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நடப்பில் இருந்தாலும் முக்கிய பொருளியல் வட்டாரங்களில் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.

கடந்த 14 நாட்களாக அங்கு தினமும் 1,000க்கும் அதிகமான கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இம்மாதம் 2ஆம் தேதி ஆக அதிகமாக 1,755 சம்பவங்கள் பதிவாகின.

பல வேலையிடங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக இருக்கிறது.

கிருமித்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் EMCO விரிவுபடுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்த வேண்டும் என மலேசிய பொதுச் சுகாதார மருத்துவர்கள் சங்கத் தலைவர் ஸைனல் அரிஃபின் ஒமர் குறிப்பிட்டுள்ளார்.

EMCO நடைமுறைப்படுத்தப்படும் அதிக கிருமித்தொற்றுள்ள இடங்களைச் சுற்றி வேலிகள் அமைத்து அவை சிவப்புப் பகுதிகளாக அறிவிக்கப்படுவதுடன், 2 வாரங்களுக்கு அங்கு செல்லவோ அல்லது அங்கிருந்து வெளியேறவோ யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த 14 நாட்களில் குறைந்தபட்சம் 40 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகும் பகுதிகள் 'சிவப்புப் பகுதிகளாக' அறிவிக்கப்படும். அந்தப் பகுதியில் குடியிருக்கும் அனைவருக்கும் கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்படும்.

இன்று மலேசியாவில் 1,103 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனையடுத்து, அங்கு மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 48,520 ஆகியுள்ளது.

கோலாலம்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு 392 கொரோனா தொற்று சம்பவங்கள் இன்று பதிவானது குறிப்பிடத்தக்கது. இதில் 385 சம்பவங்கள் தாமன்லேலா கட்டுமானத் தள குழுமத்தைச் சேர்ந்தது.

கையுறைகள் செய்யும் 'டாப் குளோவ்' நிறுவனம், கிள்ளானில் உள்ள அதனைச் சுற்றிய பகுதிகளில் இன்று EMCO நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேபோல, கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு அருகில் உள்ள மேடன் 88 பகுதியிலும் EMCO நடப்புக்கு வந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்