சிட்னி: தென்ஆஸ்திரேலியா மாநிலத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஆறு நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து திரும்பிய ஆஸ்திரேலியர் மூலம் கிருமி பரவியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் ஹோட்டல் ஒன்றில் துப்பரவு ஊழியராகப் பணிபுரிபவர் என்றும் அடிலெய்ட் நகரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமை மோசமாவதற்குள் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
சில உணவகங்களைத் தவிர பெரும்பான்மை வர்த்தகங்கள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி மக்கள் பெரும்பாலும் வீட்டிலேயே இருப்பர்.
"கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டம் தேவைப்படுகிறது. சமூக அளவிலான முடக்கநிலைக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது.
"நிலைமை மோசமாவதற்குள் முன்கூட்டியே தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கொரோனாவை எதிர்த்து துரிதமாகச் செயல்பட வேண்டும்," என்று தென்ஆஸ்திரேலியா மாநிலத்தின் முதல்வர் ஸ்டீவன் மார்ஷல் தெரிவித்தார். தென்ஆஸ்திரேலியாவில் 1.8 மில்லியனுக்கும் குறைவானோர் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி மேலும் இருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் மொத்தம் 22 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தற்போதுதான் தென்ஆஸ்திரேலியாவில் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக அளவிலான பாதிப்புக்கான அறிகுறிகள் கடந்த வாரயிறுதியில் தென்படத் தொடங்கியது.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது குறைவாக இருக்கிறது.
இருப்பினும், அங்கு பரவி வரும் கிருமி எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை என்பதாலும் விரைவில் பரவும் தன்மை கொண்டிருப்பதாலும் அதை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கை மிகவும் அவசியம் என்று திரு மார்ஷல் வலியுறுத்தினார்.
ஒருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு 24 மணி நேரத்துக்குள் மற்றவருக்கு அது பரவும் ஆபத்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைவாகப் பரவக்கூடிய இந்த கொரோனா கிருமி வகை குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு தென்ஆஸ்திரேலிய அரசாங்கம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

