தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் கடந்த ஆறு நாட்களாக முடக்கப்படுவதற்கு 'பிட்சா' ஊழியரின் பொய்யே காரணம் என்று அம்மாநில அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இல்லையென்றால் திட்டமிட்டப்படி கொவிட்-19 கட்டுப்பாடுகள் முன்கூட்டியே விலக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கூறினர்.
கிருமித்தொற்று அதிவேகத்தில் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி மக்கள் வீட்டிலேயே தங்கியிருக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். வர்த்தகங்களும் மூடப்பட்டன. ஆனால் பிட்சா ஊழியர் உண்மையைக் கூறியிருந்தால் இதனைத் தவிர்த்திருக்கலாம் என்றனர் அதிகாரிகள்.
"கிருமி பரவும் தடங்களைக் கண்டறியும் அதிகாரிகளிடம் பிட்சா வாங்குவதற்காகத்தான் பிட்சா கடைக்குச் சென்றேன் என்று ஊழியர் கூறியிருந்தார். ஆனால் அந்த ஊழியர் அதே உணவகத்தில் கிருமி தொற்றிய மற்றோர் ஊழியருடன் சேர்ந்து வேலை பார்த்துள்ளார்," என்று தெற்கு ஆஸ்திரேலிய மாநில முதல்வர் ஸ்டீவன் மார்ஷல் கூறினார்.
"ஊழியர் மூலம் பலருக்கும் பயங்கரத்தொற்று பரவலாம் என்ற அச்சத்தால் தெற்கு ஆஸ்திரேலியா முழுவதும் முடக்கப்பட்டது," என்றார் அவர்.
"கிருமிப்பரவல் இன்னமும் கவலையளிக்கும் பிரச்சினையாக இருந்தாலும் வீட்டுக்குள் தங்கும் உத்தரவு இன்று இரவுக்குள் மீட்டுக் கொள்ளப்படும் என்றும் வர்த்தகங்கள் செயல்பட படிப்படியாக அனுமதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
பொய் சொன்ன ஊழியரின் அடையாளங்களை போலிசார் வெளியிடவில்லை. தடங்களைக் கண்டறியும் அதிகாரிகளிடம் பொய் சொன்னால் சட்டப்படி தண்டனையில்லை என்பதால் அவர் மீது போலிசார் நடவடிக்கை எடுக்க வில்லை.
தெற்கு ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பயணிகள் மூலம் ஏற்பட்ட புதிய தொற்று குழுமத்தின் மூலம் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

