சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் மலேசிய ஊழியர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்க ஜோகூர் முதல்வர் உறுதி

சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் மலேசிய ஊழியர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்க ஜோகூர் முதல்வர் உறுதி

1 mins read
1bfa6dbb-c13d-462f-a7a3-0d32880a5960
போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படும் சிங்கப்பூர் கடற்பாலம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 கட்டுப்பாடுகளால் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் இருக்கும் மலேசிய ஊழியர்களுக்கு ஜோகூர் அரசாங்கம் விரைவில் உணவுக் கூடைகளை வழங்கும் என்று அம்மாநில முதல்வர் ஹஸ்னி முகம்மது இன்று (நவம்பர் 26) அறிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மலேசியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிங்கப்பூரில் இருக்கும் வரை இந்த உணவு உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கோத்தா இஸ்கந்தரில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில் 'ஜோகூர் வரவுசெலவுத் திட்டம் 2021' முன்னிட்டு அவர் உரையாற்றியபோது மேற்கொண்ட அறிவிப்பை வெளியிட்டார்.

"மலேசிய ஊழியர்களிடம் உணவுக் கூடைகளை விநியோகிப்பதில் சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகத்துடனும் மலேசிய-சிங்கப்பூர் சங்கத்துடனும் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம்," என்று திரு ஹஸ்னி கூறினார்.

இதற்கிடையே, மலேசிய-சிங்கப்பூர் எல்லை மூடப்பட்டிருப்பதன் காரணமாக சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் மலேசிய ஊழியர்களுக்கு உதவ கூட்டரசு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

வெளிநாடுகளில் இருந்து மலேசியர்கள் நாடு திரும்ப அரசாங்கம் தடை விதிக்கவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.