காற்பந்து சகாப்தம் மாரடோனாவின் மறைவு குறித்து பீலே: 'ஒரு நாள் ஆகாயத்தில் நாம் சேர்ந்து விளையாடுவோம்'

2 mins read
79c632d5-b94f-4728-bcf9-52e09f9c53c4
மறைந்த மாரடோனாவின் ஓவியங்களைத் தெருவில் காட்சிக்கு வைக்கும் இந்த ஓவியக் கலைஞர். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

கால்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டியேகோ மாரடோனா காலமானதைத் தொடர்ந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான அர்ஜெண்டினியர்கள் தலைநகர் பியூனோஸ் ஐரேசில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று (நவம்பர் 26) திரண்டனர்.

மூளையில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து குணமடைந்து வந்த மாரடோனா, மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 60.

அவருக்கு இறுதி மரியாதை செலுத்த அவரது ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்றனர். அவரது சவப்பெட்டியைச் சுற்றி அர்ஜெண்டினிய கொடியும் அவர் அணிந்த எண் 10 காற்பந்து சீருடையும் போர்த்தப்பட்டிருந்தது.

1986ல் உலகக் கிண்ணப் போட்டியை அர்ஜெண்டினா வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார் மாரடோனா. உலகம் முழுவது கோடான கோடி ரசிகர்களை வசீகரித்த மாரடோனாவின் இழப்பைத் தாங்க முடியாமல் அர்ஜெண்டினியர்கள் கண்கலங்கினர்.

அவரது நினைவாக பியூனோஸ் ஐரேஸ் நகரில் அவரது ரசிகர்கள் இரவு முழுவதும் பாடல்களைப் பாடி துயர் துடைத்தனர்.

மாரடோனாவின் மறைவைத் தொடர்ந்து அர்ஜெண்டினாவில் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அல்பெர்ட்டோ ஃபெர்னாண்டெஸ் அறிவித்தார்.

நவீனகால காற்பந்து நட்சத்திரமான அர்ஜெண்டினாவின் லயனல் மெஸ்ஸி, "அவர் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார். என்றாலும், அவர் எங்களைவிட்டுச் செல்லமாட்டார். காரணம், டியேகோவுக்கு என்றென்றும் முடிவே கிடையாது," என்று கூறினார்.

காற்பந்து விளையாட்டின் ஆகச் சிறந்த வீரர் என்று மாரடோனாவுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் பிரேசிலிய சகாப்தம் பீலே, 80, "ஒரு நாள் ஆகாயத்தில் நாம் சேர்ந்து விளையாடுவோம்," என்று தாம் விரும்புவதாகக் கூறினார்.

மாரடோனாவின் மறைவு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், மாரடோனாவை பார்த்து அந்நாட்டில் பலரும் காற்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி உள்ளிட்ட பலதரப்பினரும் மாரடோனாவின் குடும்பத்திற்கும் அர்ஜெண்டினிய மக்களுக்கும் தங்களது அனுதாபத்தை வெளிப்படுத்தினர்.

திகைப்பூட்டக்கூடியவர், சர்ச்சைக்குரியவர், அசாதாரணமானவர், புத்திசாலித்தனமானவர், மிகவும் மூர்க்கத்தனமானவர். இவை அனைத்தும் மறைந்த மாரடோனானவை விவரிக்கப் பொருத்தமான சொற்கள்.

குறிப்புச் சொற்கள்