கொரோனா அச்சத்தால் இலங்கை சிறைச்சாலையில் கலவரம்; எண்மர் மரணம், 55 பேர் காயம்

2 mins read
a96611ae-2dc9-44cb-b961-67ef04438085
மகர சிறைச்சாலையில் இருக்கும் சிறைக் கைதிகளைக் காப்பாற்றுமாறு அவர்களது உறவினர்கள் போலிசாரிடம் கெஞ்சுகின்றனர். படம்: இபிஏ -

இலங்கையில் உள்ள ஒரு சிறைச்சாலையில் கொவிட்-19 தொற்று அச்சம் காரணமாக நிகழ்ந்த கலவரத்தில் குறைந்தது எண்மர் உயிரிழந்தனர்; 55 பேர் காயமுற்றனர்.

தலைநகர் கொழும்பில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மகர சிறைச்சாலையில் கொவிட்-19 தொற்று பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, அங்குள்ள கைதிகள் நேற்று கலவரத்தில் ஈடுபட்டனர்.

சமையலறைகளுக்குத் தீ வைத்த கைதிகள், சிறைக்காவலர்களுடன் சண்டையிட்டதோடு அவர்களில் இருவரையும் பிணையாகப் பிடித்து வைத்திருந்தனர்.

இதையடுத்து, கலவரத்தை முடிவிற்குக் கொண்டு வர நூற்றுக்கணக்கான போலிசார் அங்கு குவிக்கப்பட்டனர். 200 போலிஸ் கமாண்டோக்கள் உட்பட 600 பேர் சிறை வளாகத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.

"பிணை பிடிக்கப்பட்ட அதிகாரிகள் இருவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் இருக்கிறது," என்று போலிஸ் பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார்.

ஆயினும், சிறை வளாகம் முழுவதும் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வந்துவிட்டதா என்பதை சிறைச்சாலை அதிகாரிகள் தெளிவுபடுத்தவில்லை.

இதனிடையே, அச்சிறைப் பகுதியில் இன்று விட்டுவிட்டுத் துப்பாக்கிச் சத்தம் கேட்டது.

உயிரிழந்த கைதிகள் எட்டுப் பேரின் உடல்களும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அதுபோல, காயமடைந்த 55 கைதிகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சிறைக்குள் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து, கைதிகள் தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைகளை உடைத்துக்கொண்டு வெளியில் வந்ததாகக் கூறப்பட்டது.

கடந்த சனிக்கிழமை நிலவரப்படி, இலங்கைச் சிறைகளில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அந்நோய்த்தொற்றால் கைதிகள் இருவர் மாண்டுவிட்டனர்.

கிருமித்தொற்று அதிகரிப்பால் இலங்கைச் சிறைச்சாலைகளில் கடந்த சில வாரங்களாகவே பதற்றம் நிலவி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்