தேக்கா சென்டரில் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 876 பேரில் இருவருக்கு தொற்று

தேக்கா சென்டரில் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 876 பேரில் இருவருக்கு தொற்று

2 mins read
efaa9c3b-61a3-4688-8d67-eae4a9dd90be
அந்த இருவருக்கும் தொற்று ஏற்கெனவே இருந்திருக்கலாம் எனப் பரிசோதனைகள் மூலம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தேக்கா சென்டரிலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் தொழில் நடத்தும் 876 உணவு அங்காடிக் கடைக்காரர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் இரண்டு பேருக்குத் தொற்று இருந்தது தெரியவந்தது. அந்தக் கடைக்காரர்கள் சமூக விழிப்புணர்வு பரிசோதனைக்குச் சென்றபோது இந்த நிலவரங்கள் தெரியவந்தன.

அந்த இருவருக்கும் தொற்று ஏற்கெனவே இருந்திருக்கலாம் எனப் பரிசோதனைகள் மூலம் தெரியவந்ததாக நேற்று இரவு சுகாதார அமைச்சு தெரிவித்தது. மற்ற 874 பேருக்கும் தொற்று இல்லை என்பதும் தெரியவந்தது.

தொற்று இருப்பதாகத் தெரியவந்துள்ள இரண்டு பேரில் இரண்டாமவருக்கு வெள்ளிக்கிழமை தொற்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது. 41 வயதுள்ள அந்த ஆடவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இங்கு பண்டகசாலை உதவி ஊழியராக அவர் வேலை அனுமதிச் சீட்டில் உள்ளார்.

அந்த ஆடவர் உடலில் தொற்று இருந்ததற்கான அறிகுறிகள் வெளியே தெரியவில்லை.

பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பதாகத் தெரியவந்ததை அடுத்து அந்த ஆடவர் தேசிய தொற்றுநோய் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார். கஃப் ரோட்டில் இருக்கும் பண்டக சாலையில் சரக்குகளைச் சரிபார்க்கும் பணியையும் அங்கிருந்து எண் 1 கேம்பல் லேனில் இருக்கும் ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடைக்குப் பொருட்களைக் கொடுக்கும் வேலையையும் அவர் பார்த்து வந்தார். கடையில் வாடிக்கையாளர்கள் எவரோடும் அவருக்குத் தொடர்பு கிடையாது என்று அமைச்சு குறிப்பிட்டது.

அந்த ஆடவருடன் சேர்ந்து கஃப் ரோட்டில் தங்கி இருக்கும் இரண்டு வெளிநாட்டு ஊழியர்களையும் பரிசோதித்தபோது அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதியானது.

குறிப்புச் சொற்கள்
தேக்காகொவிட்-19கொரோனாகிருமித்தொற்று