கொவிட்-19 நெருக்கடிநிலையால் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தின் சுற்றுப்பயணத் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அங்குள்ள வர்த்தகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் சிங்கப்பூருடனான எல்லை மூடப்பட்டுள்ளதால் ஜோகூருக்கு இரட்டிப்புப் பாதிப்பு என்று அம்மாநில அதிகாரிகள் கூறினர்.
இதற்கு ஜோகூரில் உள்ள ஹோட்டல்கள் விதிவிலக்கல்ல.
இந்நிலையில், நட்டம் காரணமாக ஜோகூரில் 13 ஹோட்டல்கள் நிரந்தரமாக மூடப்பட்டன.
ஜோகூரின் சுற்றுப்பயணத் துறை மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஹோட்டல்களில் 27 விழுக்காடு அறைகளில் மட்டுமே விருந்தினர்கள் இருப்பதாகவும் மற்ற அறைகள் காலியாக இருப்பதாகவும் அம்
மாநிலத்தின் சுற்றுப்பயணத் துறை, இளையர், விளையாட்டுத் துறை குழுத் தலைவர் ஓன் ஹஃபீஸ் காஸி நேற்று தெரிவித்தார்.
ஜோகூர் ஹோட்டல்கள் இந்த அளவுக்குக் காலியாக இருப்பது இதுவே முதல்முறை என்றார் அவர்.
"கடந்த ஆண்டு ஜோகூர் ஹோட்டல்களில் 57.3 விழுக்காடு அறைகள் நிரப்பப்பட்டிருந்தன.
"கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கை 27.66ஆக குறைந்தது. சிங்கப்பூருடனான எல்லையை மீண்டும் திறந்துவிடும்படி கூட்டரசு அரசாங்கத்திடம் ஜோகூர் மாநில அரசு ஒவ்வொரு வாரமும் கோரிக்கையை முன்வைக்கிறது.
"சிங்கப்பூருடனான எல்லை மீண்டும் திறக்கப்படுவதன் முக்கியத்துவம் பற்றி எங்களுக்கு நன்றாக தெரியும்," என்றார் திரு ஓன் ஹஃபீஸ். கொவிட்-19 நெருக்கடிநிலையால் பாதிக்கப்பட்ட சுற்றுப்பயணத் துறை வர்த்தகங்களுக்கு உதவும் நோக்கில் ஜோகூர் வரவுசெலவுத் திட்டம் 2021ன்கீழ் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார். ஜோகூரில் பதிவு செய்யப்பட்டுள்ள
சுற்றுப்பயண வழிகாட்டிகளுக்கு 1,000 ரிங்கிட் சலுகை வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மனநல பாதிப்பு காரணமாக மருத்துவ உதவி நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஜோகூரின் சுகாதார, சுற்றுப்புறக் குழுத் தலைவர் ஆர். வைத்தியநாதன் கூறினார்.

