'மூன்றாம் கட்டத் தளர்வுக்கு இம்மாதம் வாய்ப்பு இராது'

1 mins read
a87fcd38-a4ef-415c-ac4d-59ac0112efa1
'டிரேஸ்டுகெதர்' செயலி அல்லது கருவியைப் பயன்படுத்துவோர் அளவு 70 விழுக்காடாக உயர வேண்டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் கொவிட்-19 சமூகப் பரவல் மிகவும் குறைந்துவிட்டது. சென்ற மாதத்தில் இரண்டு வார காலத்தில் ஒருவருக்குக்கூட சமூகத்தில் தொற்று இல்லை.

நிலவரங்கள் இப்படி இருப்பதால் சிங்கப்பூர் அடுத்தகட்டமாக மேலும் கட்டுப்பாடுகளை அகற்றும் என்ற நம்பிக்கை அதிகரித்து இருக்கிறது.

இருந்தாலும் மூன்று முக்கியமான நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலொழிய மூன்றாம் கட்ட தளர்வு இந்த ஆண்டில் சாத்தியமில்லை என்று பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு தெரிவித்துள்ளது.

'டிரேஸ்டுகெதர்' செயலி அல்லது கருவியைப் பயன்படுத்துவோர் அளவு 70 விழுக்காடாக உயர வேண்டும். பாதுகாப்பு இடைவெளி மீறப்படாத நிலை வேண்டும். போதுமான அளவுக்குப் பரிசோதனைகளை நடத்தக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளும் நிறைவேறினால்தான் மூன்றாம் கட்ட தளர்வு சாத்தியமாகும் என்று அந்தக் குழு குறிப்பிட்டது.

கொவிட்-19 காரணமாக நடப்புக்கு வந்த கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் ஓடிவிட்டன.

சிங்கப்பூரில் டிரேஸ்டுகெதர் செயலியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இதுவரையில் ஏறக்குறைய 2.9 மில்லியனாக இருக்கிறது. மொத்தம் 5.7 மில்லியன் மக்களில் இந்த அளவு 50.8 விழுக்காடாகத்தான் இருக்கிறது. இதுவே மூன்றாம் கட்டத் தளர்வுகளை நடப்புக்கு கொண்டு வருவதில் பெரிய தடையாக இருக்கிறது என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்