ஸ்டாக்ஹோம்: உலகம் முழுவதும் பரவியுள்ள மலிவு விலை அறைகலன் விற்பனை நிறுவனமான இக்கியா, மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாத முடிவை எடுத்துள்ளது.
அதாவது கடந்த 70 ஆண்டு களாக வெளியிடப்பட்ட பொருட்களின் விவரங்கள் அடங்கிய அச்சுப் பிரதியை அது நிறுத்தியுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் இக்கியா புத்தகம் புதிய உச்சத்தைத் தொட்டது. அப்போது 200 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டு வீடுகளுக்கும் ஐம்பது சந்தைகளில் உள்ள இக்கியா கடைகள் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டன.
1951ல் முதலில் 250,000 பிரதிகள் அச்சிடப்பட்டன. அப்போது ஸ்வீடனில் மட்டும் இக்கியா புத்தகம் விநியோகிக்கப்பட்டது. கடைசியாக இவ்வாண்டு 40 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டன.
வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப மின்னிலக்கமயமாகும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்முடிவை இக்கியா எடுத்துள்ளது. இக்கியாவிடமிருந்து இணையத் தளம் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆகஸ்ட் மாதம் வரையிலான கடந்த 12 மாதங்களில் இக்கியா இணையத்தளத்தின் விற்பனை 45 விழுக்காடு கூடியது.

