பேராக்கின் 14வது முதல் மந்திரியாக சாரனி முகமது பதவியேற்பு

பேராக்கின் 14வது முதல் மந்திரியாக சாரனி முகமது பதவியேற்பு

1 mins read
6ca8c8d2-7e1f-4ff4-9af7-3177a7083ebc
மாநிலத்தில் பல நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடிக்குப் பிறகு நேற்று திரு சாரனிக்கு பேராக் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. படம்: தி ஸ்டார் -

பேராக்கின் 14வது முதல் மந்திரியாக சாரனி முகமது இஸ்தானா இஸ்கந்திரியாவில் இன்று (டிசம்பர் 10) பதவி ஏற்றுக்கொண்டார்.

கோத்தா டம்பான் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவரும் பேராக் அம்னோ பிரிவின் தலைவருமான அவர், பேராக் அரசர் சுல்தான் நஸ்ரின் மிஸ்ஸுதின் ஷாவின் முன்னிலையில் அரண்மனையில் இன்று காலை 11 மணிக்கு அவர் பற்றுறுதி எடுத்துக்கொண்டார்.

2018ஆம் ஆண்டில் தேர்தல் நடந்து முடிந்ததிலிருந்து மூன்றாவது முதல்வர் பதவி ஏற்பதைக் குறிப்பிட்ட சுல்தான் நஸ்ரின், அது பெருமை கொள்ளத்தக்கதல்ல என்றார்.

பேராக் சட்டமன்றத்தின் வரலாற்றில் இத்தகைய விஷயங்கள் தோல்வியைப் பிரதிபலிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தங்களது பொறுப்புகளைச் சரிவர செய்து சேவைகள் செய்வர் எனவும் பொருளியல் மேம்பாடு மற்றும் சமுதாயத் தேவைகளை நிறைவேற்றுவர் எனவும் எதிர்பார்த்து மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்தனர் என்று குறிப்பிட்ட சுல்தான், கொவிட்-19 சூழல் காரணமாக மக்கள் வேலை, வருமானம் இழந்து சிரமப்படுவதைச் சுட்டிக் காட்டினார். அரசியல் சூழல்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்றும் சுல்தான் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் பல நாட்களாக நிலவிய அரசியல் நெருக்கடிக்குப் பிறகு நேற்று திரு சாரனிக்கு பேராக் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்