கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமளவிலான போதைப்பொருளைப் பறிமுதல் செய்து போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளதுமலேசிய கடற்துறை அமலாக்கத் துறை.
பினாங்குக் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த படகில் இருந்த 2,118 கிலோ மீதேம்ஃபடேமின் வகை போதைப்பொருளை அதிகாரிகள் கடந்த புதன்கிழமை கைப்பற்றினர்.
அதன் மொத்த மதிப்பு $35 மில்லியன் (105.9 மில்லியன் ரிங்கிட்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய அந்தப் படகைத் துரத்திச் சென்றபோது அதிலிருந்து ஆடவர் ஒருவர் கடலில் குதித்ததாக அதிகாரிகள் கூறினர்.
அந்த 26 வயது ஆடவரை கெண்டி தீவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் அதிகாரிகள் பிடித்தனர். படகில் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சீனத் தேத்தூள் பொட்டலங்களில் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்தது. போதைப்பொருள் கொண்ட 1,998 பொட்டலங்கள் 130 சாக்குப் பைகளில் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப்பொருள் இந்தோனீசியாவிலிருந்து வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

