அமெரிக்காவில் பெருகும் கொவிட்-19 மரணங்கள்; 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க பரிந்துரை

2 mins read
eacdc472-4c94-4f74-adfb-5b1f726a8235
படம்: ராய்ட்டர்ஸ் -

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் பகுதி ஒன்றில் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஒருவர் கொவிட்-19 காரணமாக மரணமடைகிறார் என்று அந்த நகரத்தின் மேயர் எரிக் கார்செட்டி அபாயச் சங்கு ஊதி இருக்கிறார்.

மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்புப் பிரிவுகள் நிரம்பி வழிகின்றன. அவசர நடவடிக்கையை விட்டால் வேறு வழியில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலேயே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்தான் மக்கள் தொகை அதிகம். அங்கு 10 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக அந்த நகரில் 512,872 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 8,269 பேர் மரணமடைந்துவிட்டார்கள். மரண எண்ணிக்கை இந்த மாதத்திற்குள் 11,000ஐ தாண்டிவிடும் என்று மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் இன்று நண்பகல் வாக்கில் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,058,853 ஆக இருந்தது. மரண எண்ணிக்கை 297,801 என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இதனிடையே, அமெரிக்காவில் நோய்க் கட்டுப்பாட்டு தடுப்பு மையத்துக்கு ஆலோசனைக் கூறி வரும் சுயேட்சையான ஒரு குழு, ஃபைசர் தடுப்பூசியை 16 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களுக்கு போடலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்தக் குழுவின் இயக்குநரான டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்டு அனுமதியும் கிடைத்துவிட்டால் உடனடியாக தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்கிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகத் துறை இந்தத் தடுப்பூசியை அவசர மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று ஏற்கெனவே அனுமதித்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்