வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட எம்.பி.க்கள் மூவருக்கு வரவுசெலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் பங்கெடுக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று (டிசம்பர் 14) நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சுகாதார அமைச்சர் ஆதம் பாபா, மனிதவள அமைச்சர் எம்.சரவணன், பக்கத்தான் ஹரப்பான் எம்.பி.யான பி. பிரபாகரன் ஆகியோர் முழுக் கவச உடையணிந்து இன்று நாடாளுமன்றத்திற்கு வந்தனர். அம்மூவரும் மற்ற எம்.பி.க்களிடம் இருந்து தள்ளியிருக்கும் வகையில், மன்றத்தின் உயர்தளத்தில் அமர வைக்கப்பட்டனர்.
அவர்களை மன்ற நாயகர் அசார் அஸிஸான் ஹாருண் மன்றத்திற்குள் அனுமதித்ததற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
"கொவிட்-19 தொற்றியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவர்களை அனுமதிக்கக் காரணம் என்ன?" என்று பிகேஆர் கட்சியின் ஜெயக்குமார் மன்ற நாயகரை நோக்கிக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த நாயகர், முன்பு ஒருமுறை எம்.பி. ஒருவர் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி மன்றத்தினுள் நுழைந்ததை அடுத்து, வாக்கெடுப்பை ஒழுங்குபடுத்துவதற்காக இம்முறை தாமே விதிவிலக்கு அளித்திருப்பதாகச் சொன்னார்.
ஆயினும், பிகேஆர் மற்றும் ஜனநாயகச் செயல் கட்சிகளைச் சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள், நாயகரின் இம்முடிவிற்குத் தங்களின் எதிர்ப்பைக் காட்டும் விதமாக மன்றத்தைவிட்டு வெளியேறினர். இதையடுத்து, 110 உறுப்பினர்களின் ஆதரவுடன் கூட்டாட்சி வட்டாரங்களுக்கான வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.


