அமைச்சர்: அலுவலகம் திரும்புவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்

அமைச்சர்: அலுவலகம் திரும்புவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்

1 mins read
c8e7e1a1-89a9-42c2-9640-e3bf5c152139
அலுவலகங்களுக்குத் திரும்புவது குறித்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தலாமா என்பது குறித்து அமைச்சுகள்நிலை பணிக்குழு ஆலோசித்து வருவதாக அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஊழியர்கள் அலுவலகங்களுக்குத் திரும்புவது தொடர்பிலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியிருக்கிறார்.

"அலுவலகங்களுக்குத் திரும்புவது குறித்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தலாமா என்பது குறித்து அமைச்சுகள்நிலை பணிக்குழு ஆலோசித்து வருகிறது. கூடிய விரைவில் சில அறிவிப்புகள் இடம்பெறலாம். இன்னும் சிறிது காலம் பொறுமையாகக் காத்திருங்கள்," என்று திருவாட்டி டியோ தெரிவித்துள்ளார்.

சிங்டெல் நிறுவனத்திற்கு இன்று வருகை மேற்கொண்ட அமைச்சர், அதன்பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு சொன்னார்.

இம்மாதம் 28ஆம் தேதியில் இருந்து மூன்றாம் கட்டத் தளர்வுகள் நடைமுறைக்கு வரும் என்று நேற்று பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.

தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், எட்டுப் பேர் வரை ஒன்றுகூட அனுமதிக்கப்படுவர் என்றும் கடைத்தொகுதிகள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் வருகையாளர் வரம்பு தளர்த்தப்படும் என்றும் சொன்னார்.

சிங்கப்பூரர்களுக்கும் இப்போது இங்குள்ள நீண்டகாலக் குடியிருப்பாளர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவித்த திரு லீ, அதே நேரத்தில் பெரியவர்களுக்குத் தடுப்பூசி கட்டாயமல்ல என்றும் குறிப்பிட்டார்.

முன்னோட்டத் திட்டமாக, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து சில விடுதிகளைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் மாதம் ஒருமுறை சமூகத்திற்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர்.

குறிப்புச் சொற்கள்