ஜெனிவா: இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருப்பது குறித்து மருத்துவ ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற மாறுபட்ட கிருமித்தொற்று இப்போதுள்ள கொவிட்-19ஐ காட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரம் எதுவும் இப்போதைக்கு இல்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
"இங்கிலாந்தில் உள்ள 1,000 பேரிடம் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கிருமித்தொற்று குறித்து நாங்கள் அறிகிறோம். ஆய்வாளர்கள் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றனர். எங்கள் ஆய்வில் பலவகைக் கிருமித்தொற்றுகளைக் கண்டிருக்கிறோம். இந்த கிருமி காலப்போக்கில் மாறும் தன்மையுடையது," என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதாரத்துறை திறனாய்வாளர் மைக் ராயன் ஜெனிவாவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இங்கிலாந்தில் குறிப்பாக பிரிட்டனின் தென்பகுதியில் உள்ளோர்தான் இந்தக் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனை பிரிட்டனின் சுகாதாரத்துறை அமைச்சர் மாட் ஹான்காக் நேற்று தெரிவித்தார்.
புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தொற்று வெகுவேகமாக பரவக்கூடியது என்றும் அது இங்கிலாந்தின் தென்கிழக்குப் பகுதியின் தொற்றுப் பரவலுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்றும் திரு மாட் நாடாளுமன்றத்திற்கு அளித்த ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
"இந்த மாறுபட்ட கிருமித்தொற்று இப்போதுள்ள கொரோனா கிருமித்தொற்றைக் காட்டிலும் அதிவேகத்தில் பரவக்கூடியது என முன்னதாக மருத்துவ ஆய்வாளர்கள் கருத்துரைத்தனர்," என்றார் திரு மாட்.
இந்நிலையில் இங்கிலாந்தில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வகை மாறுபட்ட கிருமித்தொற்று மாறுபட்ட அறிகுறிகளுடன் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை என்று அந்நாட்டுத் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி தெரிவித்துள்ளார்.

