அமெரிக்காவின் எஃப்டிஏ: மொடர்னா தடுப்பூசிகள் 94% செயல்திறன் உடையவை, பாதுகாப்பானவை

அமெரிக்காவின் எஃப்டிஏ: மொடர்னா தடுப்பூசிகள் 94% செயல்திறன் உடையவை, பாதுகாப்பானவை

1 mins read
15341856-3b4c-4ca0-9758-99675d678a07
அமெரிக்காவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி மருந்து என்னும் தகுதியை மொடர்னா பெறக்கூடும். படம்: ஏஎஃப்பி -

'மொடர்னா' தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் தடுப்பூசிகள் 94 விழுக்காடு செயல்திறன் உடையவை என்றும் அவை மக்கள் போட்டுக்கொள்வதற்குப் பாதுகாப்பானவை என்றும் அமெரிக்க உணவு, மருந்து நிர்வாக அமைப்பு (எஃப்டிஏ) தெரிவித்து உள்ளது.

இதையடுத்து, அமெரிக்காவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும் இரண்டாவது தடுப்பூசி மருந்து என்னும் தகுதியை மொடர்னா பெறக்கூடும்.

மொடர்னாவின் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுவது அரிது என எஃப்டிஏ கூறியது.

பரிசோதனைக் கட்டமாக மொடர்னா தடுப்பூசி 30,000 பேரிடம் செலுத்தப்பட்டது. அந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 94.1 விழுக்காடு என அதில் தெரியவந்தது.

அமெரிக்க மக்களுக்கு 'ஃபைசர்-பயோஎன்டெக்' தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளதை அடுத்து இந்தச் செய்தி வெளிவந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 300,000ஐ தாண்டிவிட்டதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் குறிப்பிட்டது.

மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துகளுக்கு அவசரகால ஒப்புதல் வழங்குவது குறித்து தடுப்பூசி மருந்து நிபுணர் குழு நாளை சந்திக்கவுள்ளது.

அந்தக் குழுவின் ஒப்புதலும் எஃப்டிஏ தலைவரின் முறையான ஒப்புதலும் கிடைத்தால், அதில் இருந்து 24 மணி நேரத்திற்குள் அமெரிக்காவில் மொடர்னா தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணி தொடங்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்