சிட்னி: ஆஸ்திரேலியாவில் இரு வாரங்களில் முதன்முறையாக உள்நாட்டில் ஒருவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டது.
அவர், 45 வயது விமான நிலைய ஊழியர். அதனையடுத்து, அனைத்துலக விமானங்களில் பணிபுரியும் சிப்பந்திகளையும் தனிமைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்களில் சேவையாற்றும் ஊழியர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று திரும்பும் அந்த ஆடவருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் சுகாதார அமைச்சர் பிராட் ஹசார்ட் இதனைத் தெரிவித்தார்.
விமானப் பணியாளர்களைத் தனிமைப்படுத்தும் விதிமுறைகளை மாற்றுவது குறித்து அரசாங்கம், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனைத்துலக விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அவர் சொன்னார். வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் பயணிகள் இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், விமானச் சிப்பந்திகளுக்கு அது கட்டாயமில்லை என்பதை அமைச்சர் ஹசார்ட் சுட்டினார்.
"ஆனால், வெளிநாட்டுப் பயணிகளைப் போலவே நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கு வரும் விமானப் பணியாளர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நடைமுறை நடப்புக்கு வரலாம்," என்றார் அவர்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை மொத்தம் 28,000க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

