ஜெர்மனியில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து தொற்றைக் கட்டுப்படுத்த அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
பள்ளிகளும் அத்தியாவசிய சேவை வழங்காத வர்த்தகங்களும் மூடப்பட்டுள்ளன. பேரங்காடிகள், வங்கிகள் போன்றவை மட்டும் திறந்திருக்கும். மதுபானக்கூடங்கள், பொழுதுபோக்கு நிலையங்கள் போன்றவை கடந்த நவம்பர் முதல் மூடப்பட்டுள்ளன.
ஜனவரி 10ஆம் தேதி வரை இந்தக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கும். எனினும், கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் சில கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படும். அதன் ஒரு பகுதியாக, கொண்டாட்ட நடவடிக்கைகளுக்காக ஒரு குடும்பம் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் நால்வரை வீட்டிற்கு அழைக்கலாம்.
ஜெர்மனியில் நேற்று 27,728 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றால் 952 பேர் உயிரிழந்தனர்.
சொந்த நாட்டில் தயாரிக்கப்படும் 'ஃபைசர்-பயோஎன்டெக்' தடுப்பூசிகளை அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகளைத் துரிதப்படுத்த ஜெர்மானிய அரசாங்கம், ஐரோப்பிய மருந்தியல் அமைப்புக்கு நெருக்குதல் அளித்து வருகிறது.
கிறிஸ்துமஸ் விழாக்காலத்தை முன்னிட்டு மேலும் சில ஐரோப்பிய நாடுகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன. அவற்றில் ஒன்றான பிரான்ஸ், இரவு நேர ஊரடங்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் அதிகரிக்கும் கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆகக் கடுமையான கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடப்புக்கு வந்துள்ளன.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல் லண்டன் திணறி வருகிறது. கடந்த திங்கள்கிழமை முதல் லண்டன் மருத்துவமனைகளில் அதிகமான நோயாளிகள் அனுமதிக்கப்படுவது கவலை தருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அங்கு திரையரங்குகள், கேளிக்கைக் கூடங்கள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
பொது இடங்களில் அறுவருக்கு மேல் ஒன்றுகூடக்கூடாது. ஒரு குழுவுடன் மற்றொரு குழுவினர் கலக்கக்கூடாது.

