அமெரிக்காவில் புதிய உச்சமாக நேற்று (டிசம்பர் 16) ஒரே நாளில் 250,000க்கும் மேற்பட்டோரை கொவிட்-19 கிருமி தொற்றிவிட்டதாகவும் 3,700 பேர் இறந்துவிட்டதாகவும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கடந்த ஒரு மாதகாலமாக அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்தொற்றுக்காக இப்போது ஏறத்தாழ 113,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறைத் தரவுகள் கூறுகின்றன.
அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஐந்து விழுக்காட்டினரை, அதாவது ஏறக்குறைய 17 மில்லியன் பேரை கொரோனா பாதித்துவிட்டது.
இந்நிலையில், கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கையை ஏற்கெனவே தொடங்கிவிட்ட அமெரிக்கா, இவ்வார இறுதிக்குள் ஃபைசர் நிறுவனத்திடம் இருந்து 2.9 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற இலக்கு கொண்டுள்ளது.
ஆயினும், அடுத்த ஆண்டிற்குள் தடுப்பூசி பரவலாகக் கிடைக்காமல் போனால் அமெரிக்காவின் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பு சீர்குலைந்துவிடும் என அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ராபர்ட் ரெட்ஃபீல்டு எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவில் இதுவரை 307,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துவிட்டனர்.
ஜோ பைடனுக்குத் தடுப்பூசி
இதனிடையே, அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்சும் அவரின் மனைவி கேரனும் இன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள இருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது.
அதேபோல, புதிய அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஜோ பைடன் அடுத்த வாரம் தடுப்பூசி போட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

