பிரான்ஸ் அதிபருக்கு கொவிட்-19 தொற்று

பிரான்ஸ் அதிபருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read
b2f3cbef-8d09-445b-adfc-cf45e7655e9f
பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று (டிசம்பர் 17) அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்தது. படம்: ஏஎஃப்பி -

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மெக்ரோனுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று (டிசம்பர் 17) அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்தது.

கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த அவ்வறிக்கை, நாட்டில் நடப்பில் உள்ள விதிமுறைகளின்படி, அவர் 7 நாட்களுக்குத் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வார் எனவும் தமது அலுவல்களை அவர் வசிப்பிடத்திலிருந்து பார்த்துக்கொள்வார் என்றும் குறிப்பிட்டது.

அவருடன் தொடர்பில் இருந்த பிரான்ஸ் பிரதமர் ஜீன் கேஸ்டெக்சும் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது. அவருக்கு கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்றாலும், தடுப்பூசி உத்தியை வகுப்பதன் தொடர்பில் வியாழக்கிழமை செனட்டில் நடைபெறும் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் அதிபரின் மனைவி பிரிகிட், அந்நாட்டு நாடாளுமன்ற நாயகர் ரிச்சர்ட் ஃபெராண்ட் ஆகியோரும் கிருமித்தொற்று அறிகுறிகள் இல்லாதபோதும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

நேற்று ஒரே நாளில் பிரான்சில் 17,000க்கும் அதிகமான புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில், அங்கு இதுவரை 59,300க்கும் அதிகமானோர் தொற்றால் உயிரிழந்தனர்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆகியோரும் கொவிட்-19 பாதிப்புக்குளாகி பின்னர் குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்