மலேசியாவின் பினாங்கில் ஆண்டு தோறும் தைப்பூசத்தன்று முருகக் கடவுளின் சிலையுடன் நடத்தப்படும் இரட்டை தேர் ஊர்வலம் அடுத்த ஆண்டு நடைபெறுமா என்பது சந்தேகமாக உள்ளது. கொவிட்-19 பரவலைத் தடுக்க பெரும் கூட்டத்தைத் தவிர்க்க அந்த நிகழ்வு ரத்து செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரியமுடைய வெள்ளித் தேர், அண்மையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட தங்கத் தேர் ஆகியவை ஆண்டுதோறும் தைப்பூசத்தை ஒட்டி நடத்தப்படும் 3 நாள் கொண்டாட்டத்தில் முக்கிய இடம் பெறும்.
அடுத்த ஆண்டு தைப்பூசம் எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பது பற்றி சில கூட்டங்கள் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைவர் டாக்டர் பி. ராமசாமி தெரிவித்தார்.
பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான திரு ராமசாமி, மக்களின் பாதுகாப்பே மிக முக்கியம் என்றார்.
சுகாதாரத் துறை, தேசிய பாதுகாப்பு மன்றம், ராயல் மலேசிய போலிஸ் ஆகிய அமைப்புகளுடன் கலந்தாலோசித்து அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் தைப்பூசக் கொண்டாட்டம் தொடர்பான நடைமுறைகள் அறிவிக்கப்படும்.
தைப்பூசம் அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.