அமெரிக்காவில் தொற்று 18 மில்லியனை கடந்தது

அமெரிக்காவில் தொற்று 18 மில்லியனை கடந்தது

1 mins read
c4deedc1-fef5-438a-bb9a-b380fd91c665
அமெரிக்காவின் ஒட்டுமொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை 18 மில்லியனைக் கடந்தது. ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகக் கணக்கெடுப்பு இதனைக் குறிப்பிட்டது. படம்: ஏஎஃப்பி -

அமெரிக்காவின் ஒட்டுமொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை 18 மில்லியனைக் கடந்தது. ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகக் கணக்கெடுப்பு இதனைக் குறிப்பிட்டது.

கொவிட்-19 கிருமிப் பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,006,061 என்றும் மரணமுற்றோர் எண்ணிக்கை 319,000 என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, தடுப்பூசி மருந்துகளைக் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு கையாண்டு வருகிறது.

ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துக்கு அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது.

கிருமிப் பரவல் வேகத்தைக் கட்டுப்படுத்த ஒவ்வோர் அமெரிக்க மாநிலமும் வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

இருந்தபோதிலும் பதவி விலக இருக்கும் அதிபர் டோனல்ட் டிரம்ப், கிருமியால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து மதிப்பிட்டு வருகிறார். கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு திரும்பத் திரும்ப அவர் மாநிலங்களை கேட்டு வருகிறார்.

கிருமியால் பாதிக்கப்பட்டு தாமே சொந்தமாக மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையிலும் அவரின் விமர்சனப் போக்கு மாறவில்லை.

மாறாக, அதிபர் பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன் கொவிட்-19 கிருமி பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளார். முகக்கவசம் அணிவதையும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து விழிப்புநிலையில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும், அமெரிக்க மக்களிடையே தடுப்பூசி மீதான நம்பிக்கையை ஏற்படுத்த தாமே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்