சோல்: தென்கொரியா, 16 மில்லியன் பேருக்கான கொவிட்-19 தடுப்பூசி மருந்தை ஜான்சன் & ஜான்சன், ஃபைசர் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்துவதற்கு தென்கொரியா போராடி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டுப் பிரதமர் சுங் சை-கியூன் இதனை அறிவித்துள்ளார்.
மூன்றாவது நோய்த்தொற்று அலை வீச்சு காரணமாக அங்கு நாளுக்கு நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இது அரசாங்கத்திற்கு பெரிய நெருக்கடியைத் தந்துள்ளது.
நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி கொள்முதலை அரசாங்கம் எப்போது செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதனையடுத்து தடுப்பூசி மருந்தைக் கொள்முதல் செய்து தொற்றுப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.
ஜெர்மனின் பயோஎன்டெக் நிறுவனமும் ஃபைசர் நிறுவனமும் இணைந்து தயாரித்த பைசர் தடுப்பூசி மருந்து 2021 ஏப்ரல் மாதத்திற்குள் தென்கொரியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தத் தடுப்பூசி மருந்து 10 மில்லியன் பேருக்குப் போதுமானது என்று கூறப்படுகிறது. இரண்டாவது காலாண்டுக்குள் நாட்டின் மொத்த மக்களுக்கும் தேவையான தடுப்பூசி மருந்தை தென்கொரியா கிடைக்கப்பெற்று விடும் என்று திரு சுங் தெரிவித்தார். அதற்கான முயற்சிகள் நடப்பில் உள்ளதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இரண்டாவது காலாண்டில் இருந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தும் விநியோகத்திற்குத் தயாராகிவிடும். அந்த மருந்துகள் 2 முதல் 6 மில்லியன் வரையிலான மக்களுக்குப் போடப்படும்.
இந்த இரண்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படவிருக்கும் தடுப்பூசி மருந்துகள் தென்கொரியாவின் மக்கள் தொகையில் 85 விழுக்காட்டினருக்கு அதாவது 52 மில்லியன் பேருக்குப் போதுமானதாக இருக்கும் என்று பிரதமர் சுங் கூறினார்.
மேலும் நான்கு நாடுகளில் செயல்பட்டு வரும் மற்ற இரண்டு நிறுவனங்களான ஆஸ்ட்ராஸெனிக்கா பிஎல்சி மற்றும் மொடர்னா இன்க் ஆகியவற்றிடம் இருந்து தென்கொரியா, 10 மில்லியன் பேருக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்யவுள்ளது.
தென்கொரியாவில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 985 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரையிலும் மொத்தம் 53,533 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலியானோர் எண்ணிக்கை 756.
இந்நிலையில் கொவிட்-19 மூன்றாம் அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் அங்குள்ள சுற்றுலாத்தளங்கள் மூடப்பட்டுள்ளன. நான்கு பேருக்கு மேல் ஒன்றுகூட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ், புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மக்கள் ஒன்றுகூடுவதால் கொரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்பு உள்ளதால் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரித்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

