2028ல் சீனா, அமெரிக்காவை மிஞ்சி உலகின் ஆகப் பெரும் பொருளியலாக உருவெடுக்கும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக முன்னுரைக்கப்பட்ட காலத்தைவிட ஐந்து ஆண்டுகள் முன்கூட்டியே உள்ளது என்றும் அதற்குக் காரணம், கொவிட்-19 கிருமிப்பரவலிலிருந்து இவ்விரண்டு நாடுகள் மீண்டுவரும் விதத்தில் உள்ள வித்தியாசம் என்று அமெரிக்காவின் பொருளியல் மற்றும் வர்த்தக ஆய்வு நிலையம் தனது வருடாந்திர அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
"கொவிட்-19 கிருமிப்பரவலும் அதனால் ஏற்பட்ட பொருளியல் வீழ்ச்சியாலும் இந்தப் போட்டியை சீனாவுக்குச் சாதகமாக்கியுள்ளது," என்றது அந்த அமைப்பு. கிருமிப்பரவலை சீனா மிகக் கெடுபிடியான முடக்கநிலையின்மூலம் கட்டுப்படுத்தியிருப்பதாகக் கூறிய இந்த அமைப்பு, அமெரிக்கவின் நீண்ட கால வளர்ச்சி பாதிப்பு சீனாவை முன்னுக்கு நிறுத்திவைப்பதாக அது தெரிவித்தது.
2021 முதல் 2025 வரை சீனாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 5.7 விழுக்காடு உயரும். 2026 முதல் 2030 வரை இந்த விகிதம் சீனாவுக்கு 4.5 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் பொருளியல் வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டாலும் 2022 முதல் 2024 வரை அந்த விகிதம் 1.9 விழுக்காடு குறையும். அதன் பின்னர் அவ்விகிதம் 1.6 விழுக்காடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் ஐந்தாவது பெரும் பொருளியலாக விளங்கும் பிரிட்டன் 2024ஆம் ஆண்டில் ஆறாம் நிலைக்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

