மலேசியாவில் உள்ள இந்தியர்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் உடனடியாகக் கலந்துகொள்ளுமாறு அங்கு உள்ள மலேசிய இந்து சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளது.
நாட்டிலுள்ள இரு மில்லியன் இந்தியர்களில் 400,000 இந்தியர்கள் மட்டுமே 'மைசென்சஸ்' எனப்படும் இணையம் வழியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பங்கேற்று பதிவு செய்துள்ளது தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் ஆர்எஸ் மோகன் ஷான் தெரிவித்து உள்ளார்.
இதில் இந்தியர்களின் பங்கெடுப்பை அதிகப்படுத்த புள்ளி விவரத் துறை முன்வந்துள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் திரு ஷான் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் வழி நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கான விண்ணப்பப் பாரத்தை நிரப்ப தமிழ்ப் பள்ளிகள், கோயில்கள் மற்றும் தொண்டூழிய நிறுவனங்களின் ஒத்துழைப்பு நாடப்பட்டு உள்ளது. ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நாம் பயன்படுத்துவது போல மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலும் பங்கேற்பது அவசியம் என்றார் அவர்.
சுமார் 32.7 மில்லியன் மலேசிய மக்களை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளில் நூறாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டு காலாண்டுக்குள் இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மலேசியாவில் 1963ஆம் ஆண்டு முதல் பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

