கொள்ளைநோய் உதவித் திட்டத்திற்கான US$2.3 டிரில்லியன் (S$3.06 டிரில்லியன்) மசோதாவிலும் செலவின ஒதுக்கீட்டிலும் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மறுத்ததைத் தொடர்ந்து மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிப்படைந்து உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கொவிட்-19 சிரம காலத்தில் வேலைகளை இழந்தோர் நிவாரண உதவிகளைப் பெறுவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ள தொகையில் US$892 பில்லியன் தொகை கொள்ளை நோய் பரவல் காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான ஒதுக்கீடு.
மேலும் வேலையின்மைக்கான சிறப்புப் பலன்களின் விரிவாக்கமும் இதனுள் அடங்கி உள்ளது. இவை அத்தனைக்குமான காலக்கெடு டிசம்பர் 26. முன்னதாக, ஒதுக்கப்பட்டுள்ள தொகை குறித்து திரு டிரம்ப் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
தொழிலாளர் துறையின் தரவுப்படி, காலக்கெடு முடிவதற்குள் மசோதாவில் திரு டிரம்ப் கையெழுத்திடாவிட்டால் 14 மில்லியன் பேர் நீட்டிக்கப்பட்ட பலன்களை இழக்க நேரிடும்.
பல இழுபறிகளுக்கு இடையில் வெள்ளை மாளிகை ஆதரவுடன் ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் கடந்த வாரம் உதவித்தொகுப்புக்கு ஆதரவளித்தனர்.
தற்காலிக அரசாங்க நிதியளிப்பு மசோதா நாடாளுமன்ற ஒப்புதலைப் பெறமுடியாமல் போனால் செவ்வாய்க்கிழமை முதல், ஒரு பகுதி நிர்வாகம் முடங்கும் நிலை உள்ளது.