பெய்ஜிங்: சீனாவில் புதிதாக 22 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் நேற்று தெரிவித்தது. இவர்களில் 12 பேருக்கு உள்ளூரில் தொற்றியதாகவும் அது கூறியது. இந்த 12 பேரில் ஐவர் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள்.
தொடர்ந்து நான்காவது நாளாக பெய்ஜிங்கில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவானதால் விடுமுறை காலத்தில் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் அங்கு எழுந்துள்ளது. எனவே பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
பெய்ஜிங்கிற்கு உட்பட்ட எல்லா மாவட்டங்களும் அவசரநிலையைக் கடைப்பிடிக்குமாறும் தொற்று காணப்பட்ட குடியிருப்புப் பகுதிகளையும் கிராமங்களையும் தனிமைப்படுத்துமாறும் தலைநகரின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் காய் குய் அறிவுறுத்தி உள்ளார்.
இவற்றில் ஷுன்யி மாவட்டம் அபாயம் மிகுந்ததாகத் தோற்றமளிக்கிறது. அண்மைய தொற்றுச் சம்பவங்கள் அனைத்தும் இந்த மாவட்டத்தில்தான் பதிவாயின. எனவே போர்க்கால நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள 800,000 குடியிருப்பாளர்களுக்கும் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சந்திரமுறைப் புத்தாண்டு கொண்டாட்ட ஒருவார விடுமுறை பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்குவதால் அதற்கு முன்னர், தொற்றுக்கு அதிகம் இலக்காகக்கூடிய சுமார் 50 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி மருந்து செலுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

