மலேசியாவில் ஊழியர்களுக்கு உரிய தங்குமிட வசதி அளிக்காததற்காக மற்றொரு கையுறை தயாரிப்பு நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது. பிரைட்வே ஹோல்டிங்ஸ் எனும் அந்த நிறுவனத்தின் மீது 30 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
மனிதவள அமைச்சின் தொழிலாளர் துறை, காஜாங் மாவட்டத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையைக் கடந்த வாரம் பார்வையிட்டது. தொழிற்சாலையின் பின்புறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழுக்கான சரக்கு கொள்கலன்களில் ஊழியர்கள் நெருக்கமாக வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குறைந்தபட்ச தரக் குறியீடுகளை அந்த வசிப்பிடங்கள் பூர்த்தி செய்யவில்லை என அமைச்சு கடந்த 27ஆம் தேதி தெரிவித்தது. முறையான தங்குமிட சான்றிதழையும் அந்த நிறுவனம் பெற்றிருக்கவில்லை.
உலகின் ஆகப் பெரிய கையுறை தயாரிப்பு நிறுவனமான 'டாப் கிளவ்' நிறுவனத்தின் மீது இம்மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என மலேசியா முன்பு அறிவித்திருந்தது.
மலேசியாவில் கடந்த செப்டம்பர் முதல் அதிகரித்த கொவிட்-19 பரவலை அடுத்து, அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105,000ஐக் கடந்தது. அங்கு இதுவரை 452 பேர் உயிரிழந்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிக்கை தெரிவித்தது.

