மான்செஸ்டர்: இன்ஸ்டகிராம் பதிவு ஒன்று காரணமாக மான்செஸ்டர் யுனைடெட் எடின்சன் கவானிக்கு மூன்று ஆட்டங்களில் விளையாடத் தடையும் 100,000 பிரிட்டிஷ் பவுண்ட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சௌத்ஹேம்டன் குழுவுக்கு எதிராக வெற்றி கோலைப் போட்டபின் கவானி இன்ஸ்டகிராம் பதிவில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியாகக் கூறப்படுகிறது.
அவர் பயன்படுத்திய அந்த ஸ்பானிய மொழி வார்த்தை கறுப்பினத்தவரை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று கூறிய இங்கிலாந்து காற்பந்துச் சங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. திரு கவானி, வயது 33, குற்றத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் பயன்படுத்திய வார்த்தையின் அர்த்தம் அவருக்கு விளக்கப்பட்டதும் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
அவர் சார்பாக அறிக்கை வெளியிட்ட மான்செஸ்டர் யுனைடெட் குழு, அருமை நண்பர் ஒருவர் அனுப்பிய வாழ்த்துக்கு தாம் அன்புகூர்ந்து நன்றி சொல்லவே எண்ணினார் என்றும் இனவாதத்தை ஆதரிக்கவோ, அதற்குத் துணைபோகவோ அவர் எண்ணியதில்லை என்றும் விளக்கமளித்தது.
அந்த வார்த்தை எப்படிப்பட்ட அர்த்தத்தை கொண்டுள்ளது என்று அவருக்கு விளக்கப்பட்டவுடன் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன் தமது பதிவை அவர் உடனடியாக நீக்கிவிட்டதையும் யுனைடெட்டின் அறிக்கை சுட்டியது.

