மலேசியாவில் இதற்குமுன் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 2,593 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதை அடுத்து, மருத்துவமனையில் படுக்கைகள் கிட்டத்தட்ட முழுக் கொள்ளளவை எட்டும் வகையில் வேகமாக நிரம்பி வருவதாகச் சொல்லப்படுகிறது.
மலேசியாவின் ஆகப் பணக்கார, வளர்ச்சியடைந்த மாநிலமான சிலாங்கூரில்தான் நேற்று ஆக அதிகமாக அங்கு 965 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. அதனைத் தொடர்ந்து ஜோகூரில் 571 சம்பவங்களும் சாபாவில் 405 சம்பவங்களும் பதிவாகின.
தலைநகர் கோலாலம்பூரில் மட்டும் நேற்று புதிதாக 256 பேரை கொரோனா தொற்றியது.இப்போதைக்கு 24,347 பேர் கிருமித்தொற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் மொத்தம் 28,674 படுக்கைகள் உள்ள நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட 85%, கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில், மலேசியாவில் இதுவரை 125,438 பேரை கொரோனா தொற்றிவிட்டது.
கடந்த செப்டம்பரில் கிருமித்தொற்று மூன்றாவது அலை அடிக்கத் தொடங்கிய பிறகு, மலேசியாவில் நாள்தோறும் நான்கு இலக்கங்களில் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
கிருமித்தொற்றால் நேற்று மேலும் நால்வர் மரணமடைந்தனர். இதையடுத்து, மலேசியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 513ஆக அதிகரித்தது.

