கொரோனா நெருக்கடிநிலை காரணமாக தாய்லாந்தின் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, கிருமிப் பரவலைத் தடுக்க அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் ஒவ்வொரு நாளும் 200க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 9,841 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருமித்தொற்று காரணமாக 67 பேர் மாண்டுவிட்டனர்.
சமுட் சாக்கோன் மாநிலத்தில் உள்ள கடலுணவுச் சந்தையில் பணிபுரிந்த பலருக்குத் திடீரென்று கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து தாய்லாந்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு அந்தக் கடலுணவுச் சந்தையில் பணிபுரியும் மியன்மார் ஊழியர்களே காரணம் என்று தாய்லாந்து நாட்டவர்கள் பலர் குறைகூறுகின்றனர். சமுட் சாக்கோன் மாநிலத்தில் கிட்டத்தட்ட 260,000 பதிவு செய்யப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளனர். ஆனால் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு ஊழியர்களையும் சேர்த்து ஏறத்தாழ 400,000 வெளிநாட்டு ஊழியர்கள் அந்த மாநிலத்தில் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கொவிட்-19 பாதிப்பு இல்லை என உறுதி செய்யும் மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்த பிறகே வேலைக்குத் திரும்ப முடியும் என்று வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதலாளிகள் நிபந்தனை விதித்திருப்பதாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆதரவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
முதலாளிகள் பலர் முன்வைக்கும் இத்தகைய நிபந்தனைகளால் வெளிநாட்டு ஊழியர்கள் பலருக்கு வேலைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்க உதவி பெற முடியாமலும் அவர்கள் சிரமப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. சில வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொவிட்-19 மருத்துவச் சோதனை நடத்த அரசாங்க மருத்துவமனைகள் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

