ஜாமியா இஸ்லாமியா பயங்கரவாத அமைப்பின் ஆன்மிகத் தலைவர் அபு பக்கர் பஹீர் சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.
82 வயது மத குருவான பஹீர் 2009ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டதிலிருந்து சிறையில் இருந்து வந்தார், இந்தோனீசியாவின் ஆச்சே மாநிலத்தில் பயங்கரவாதிகளுக்கான முகாமை அமைக்க அவர் நிதி வழங்கியது நிரூபிக்கப்பட்டதை அடுத்து 2011ஆம் ஆண்டில் அவருக்கு 15 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பஷீரின் உடல்நலம் பாதிப்படைந்ததை அடுத்து அவர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டதாக இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்கு ஜாவா போகோரில் உள்ள குனோங் சிந்தூர் சிறைச்சாலையிலிருந்து பஷீரை அவரது குடும்பத்தாரும் வழக்கறிஞரும் அழைத்துச் சென்றதாக இந்தோனீசியாவின் சட்ட, மனித உரிமை அமைச்சின் பேச்சாளர் திருவாட்டி ரிக்கா அப்பிரியாந்தி தெரிவித்தார்.
பஷீர் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவருக்கு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. கிருமித்தொற்று பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
காலை தொழுகைக்குப் பிறகு தமது இரு மகன்கள், மூன்று வழக்கறிஞர்கள், மருத்துவ அவசரநிலை மீட்புக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் ஆகியோருடன் பஷீர் சிறையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். தமது சொந்த ஊரான மத்திய ஜாவாவில் உள்ள சோலோ நகருக்கு அருகில் உள்ள சுகோஹார்ஜோவுக்கு பஷீர் செல்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
2002ஆம் ஆண்டு இந்தோனீசியாவின் பாலித் தீவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 202 பேர் மாண்டனர். அந்தத் தாக்குதலை பஷீர்தான் திட்டமிட்டு நடத்தியதாக நம்பப்படுகிறது. ஆனால் அதுதொடர்பாக அவருக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.
சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பு இந்தோனீசியாவுக்கு விஸ்வாசமாக இருப்பது குறித்தும் நாட்டின் பஞ்சசிலா கொள்கைக்கு உட்பட்டு நடப்பது தொடர்பாகவும் பற்றுறுதி எடுக்க வேண்டும் என்று பஷீரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
பஷீருக்கான சீர்திருத்தத் திட்டம் தொடரும் என்று இந்தோனீசியாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் அமலாக்கப் பிரிவுத் தலைவர் எடி ஹார்டோனி கூறினார்.
"நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவும் வகையில் மத போதனைகளை பஷீர் போதிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்." என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பஷீரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும் என்று இந்தோனீசிய போலிசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே, பஷீர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து பாலி வெடிகுண்டு தாக்குதலில் மாண்ட ஆஸ்திரேலியர்களின் குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

