மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தகவல் கிடைத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய கோலாலம்பூர் போலிசார் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைது செய்தனர். கடந்த திங்கட்கிழமை மாலை 5.40 மணி அளவில் கம்போங் பத்து மூடாவில் 49 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு கார்களை போலிசார் சோதனையிட்டனர்.
அதிலிருந்த 14.4 கிலோ கஞ்சாவும் 1,070 ரிங்கிட் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் இருந்த 187.4 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9.53 மணி அளவில் தாமான் தேசா பெட்டாலிங் குடியிருப்புப் பேட்டையில் 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய பிறகு சுங்கை பிசியில் உள்ள குடியிருப்புப் பேட்டையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்குள் இருந்த 63.7 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிரடி நடவடிக்கையின்போது மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

